நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நயினார் நாகேந்திரன்

முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும் “ரீல்ஸ்” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “யதார்த்தம்”-இல் உள்ள மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரம் முதல்-அமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நயினார் நாகேர்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கொலை

ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியான தணிகாசலம் என்பவரை, போதையில் இருந்த இளைஞர்கள் ஓட ஓட விரட்டி சென்று, புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை பதற செய்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

போதை சக்தி

“தூய சக்தி” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய் முதல்அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் “போதை சக்தி”யின் பிடியில் சிக்கி கொண்டதாக தான் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக்குகளை மூடிவிட்டதாக தவெக அரசு தம்பட்டம் அடித்து கொண்டாலும், இளைஞர்களிடையேயான மதுப்பழக்கமோ, சமூகத்தில் போதையால் உண்டாகும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை.

சட்டம் ஒழுங்கு

காவல்துறையினர் மீதோ தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதோ குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரது கைகளிலும் மது புட்டிகளும், போதை பொருட்களும் மிக சரளமாக புழங்குகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

ஆனால், முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும் “ரீல்ஸ்” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “யதார்த்தம்”-இல் உள்ள மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை. இனியாவது எதிர்க்கட்சிகளிடம் எதுகை மோனை வசனம் பேசி காலத்தை கடத்தாமல், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.