சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறமை தேடல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்து 50 ஆயிரத்து 265 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இந்த தேர்வின் மதிப்பெண் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, சாதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் தேர்வு கூட நுழைவுச்சீட்டை இணைந்து 16-ந்தேதிக்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 16-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் திருத்தங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம் ஒரு கல்வி ஆண்டுக்கு உதவித்தொகையாக உரிய தகுதிகள் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்ககம் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.