தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அம்பையில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அம்பை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு கழகம் சார்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இப்பகுதிக்கு செல்லும் வழியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த கடையை அகற்றக்கோரி மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை மாற்றாததை கண்டித்து டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் மற்றும் ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.