தமிழக செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் ஏரிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசிவருவதால் மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் (84.2 டிகிரி), குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் (75.2 டிகிரி) ஆக இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 1 செ.மீ. அளவு மழை பெய்து உள்ளது. இதுதவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது. குறிப்பாக நெல்லையில் 45, திருச்சியில் 30.3, ராமநாதபுரத்தில் 27.9, திருவாரூரில் 24.3 மி.மீ. என்ற அளவில் மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்