தமிழக செய்திகள்

கோவை: ரூ.37.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்; பறக்கும் படை அதிரடி

நகைகளை ஆம்னி பேருந்தில் எடுத்து வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் கடந்த 15-ந்தேதி வெளியிட்டார். இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி, ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும். இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பறக்கும் படையில் உதவி காவல் ஆய்வாளர், காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் உள்ளிட்டோர் இருப்பர். பறக்கும் படையுடன் கண்காணிப்பு குழுவும் இணைந்து செயல்படும்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.37.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகளை ஆம்னி பேருந்தில் எடுத்து வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.