கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: ஆசிரியர் கைது

கோவை உக்கடம் பகுதியில், தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவியின் தற்கொலைக்கு, அவர் முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததுதான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதில், மாணவி கடந்த ஆண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (வயது 35) என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை மாணவி பயத்தின் காரணமாக வெளியே சொல்ல வில்லை. பின்னர் நேரடி வகுப்பு தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்தது.

மேலும் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை பள்ளிக்கு அழைத்து, மிதுன்சக்கரவர்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதன் பின்னர் கொரோனா 2-வது அலை முடிந்து பிளஸ்-2 வகுப்புக்கு மாணவி செல்லும்போதும், இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து உள்ளது. இது பற்றி மாணவி, தனது ஆண் நண்பரிடம் கூறி அழுதுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாணவி, பெற்றோரிடம் தனக்கு பள்ளி பிடிக்க வில்லை என்று கூறி அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கினார். தொடர்ந்து அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து பிளஸ்-2 படிப்பை தொடர்ந்தார். ஆனாலும், ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்தது.

இதனால் மனவேதனையடைந்த பள்ளி மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தி மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...