தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பூர்வா கார்க் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பூர்வா கார்க் ஆய்வு செய்தார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு...

புதுவை மாநிலத்தில் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.

அந்தவகையில் அடுத்த (அக்டோபர்) மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

புதுவை பிராந்தியத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவை லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக், மோதிலால்நேரு பாலிடெக்னிக், தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இந்த வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இதற்காக அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் பாலிடெக்னிக்கில் புதுவை நகராட்சி, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகளும், மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உழவர்கரை நகராட்சி வாக்குகளும், தாகூர் கலைக்கல்லூரியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் பதிவான வாக்குகளும், பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பாகூர், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இந்த மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் நேற்று திடீரென ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணிக்கை பொறுப்பு அதிகாரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது அவர், பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.