கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவருடைய மகள் ராதிகா (வயது 22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் வடலூர் அருகே பார்வதிபுரத்தை சேர்ந்த தனது தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ்(21) என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர், ராதிகாவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே மந்தாரக்குப்பத்தை அடுத்த வீணங்கேணி பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதலி இறந்த சோகத்தில், அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மந்தாரகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக கூறப்படும் வாலிபரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனால் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவி ராதிகாவின் முகநூல் கணக்கில் இருந்து வெளிநாட்டு பெண்ணின் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த வாலிபர் பிரேம்குமார் சீ... என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி என்னை பார்த்து சீ... என்று எப்படி கூறலாம் என்று அநாகரிகமான முறையில் பதில் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் மாணவியின் வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருதரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு வந்த அவரது தாய் மாமன் மகன் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் முகநூல் கணக்கில் இருந்து வெளிவந்துள்ள வெளிநாட்டு பெண்ணின் படத்தை மாணவியே பதிவு செய்தாரா? அல்லது அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்து வேறு யாரேனும் அந்த ஆபாச படத்தை பதிவு செய்தார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும் மாணவியின் முகநூல் கடவுச்சொல் பற்றி தெரிந்து வைத்துக்கொண்ட நபர் யாரேனும் அதை பயன்படுத்தி வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதன் முடிவிலேயே இந்த சம்பவத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழும்.
மேற்கண்டவாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட பிரேம்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலருடன் நேற்று பகல் 12 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கட்சி பிரமுகர்களை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வாலிபர் பிரேம்குமார் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. பின்னர் பிரேம்குமாரை மந்தாரக்குப்பம் போலீசார் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரேம்குமாரின் தந்தை பன்னீர்செல்வம், சித்தப்பா மகன் வல்லரசு(20) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இவர்களை மந்தாரக்குப்பம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.