ஆந்திர மாநிலம் மல்லாரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பவன் குமார் (வயது 18). இவர் திருவள்ளுர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் பவன்குமாருக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது நண்பரான கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (18) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் வரும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த பவன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் பின்பக்கம் அமர்ந்து இருந்த லோகேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் லோகேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (43). தனியார் கல்லூரி பஸ் டிரைவராக வேலை செய்து வந்த இவர், கடந்த 1-ந்தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஒபுளாபுரம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி பஸ்சை நிறுத்தி விட்டு எதிர்புறம் உள்ள கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற கார் ஒன்று ராஜேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.