தஞ்சை,
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து, கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டிக்கு காரில் பயணம் செய்தார்.
அவரது வாகனத்தை அவரது ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். இதில் பல இடங்களில் விபத்து ஏற்பட்டது. அப்படி தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அவரது நண்பர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கல்லூரி மாணவர் விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயமடைந்து கடந்த 19 நாட்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று மாலை மரணமடைந்தார். விக்னேஷ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.