அம்பத்தூர் அடுத்த வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் வசிப்பவர் சோபா. இவருடைய மகன் பிரவீன் (வயது 18). இவர், நெற்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
பிரவீன், நேற்று மதியம் ஆவடி புதிய ராணுவ சாலையில் ஆவடி பஸ் நிலையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த அரசு பஸ், பிரவீன் சென்ற மோட்டார் சைக்கிளின் கைப்பிடியில் உரசியது.
இதில் நிலை தடுமாறிய பிரவீன், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் பிரவீன் மீது ஏறி இறங்கியது. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காஞ்சீபுரம் மாவட்டம், உத்தரமேரூரை சேர்ந்த பஸ் டிரைவர் குமார் (40) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் செல்வம் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.