தமிழக செய்திகள்

அரசு சுவர்களில் வண்ண ஓவியங்கள்

ஊட்டி 200-வது ஆண்டு விழாவையொட்டி அரசு சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி, 

ஊட்டி 200-வது ஆண்டு விழாவையொட்டி அரசு சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.

தொடக்க விழா

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஊட்டி நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தார்.

கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தத்ரூப ஓவியங்கள்

இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி அடுத்த மாதம் (மே) ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரவும், முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாகவும் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக சாலை, படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா சாலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசு தடுப்புச்சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. குறிப்பாக வனவிலங்குகளான புலி, சிறுத்தை, யானை, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஓவியங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். கோடை சீசனையொட்டியும், ஊட்டி 200-வது ஆண்டு விழாவையொட்டியும் அரசு சுவர்கள் புதுப்பொலிவு பெற்று வருகிறது.