சென்னை,
இந்தியா முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு வழங்கிய 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்த நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் அனைத்தும் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் இந்த செயலி நேற்று செயல்பாட்டில் இருந்தது.
தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் முதல் தடுப்பூசி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 6 மையங்களில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 தடுப்பூசிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பயனாளிகளுக்கு எந்த தடுப்பூசி வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்தனர். மேலும், சென்னையில் 2 தனியார் மருத்துவமனைகள் உட்பட 14 மருத்துவமனையில் நேற்று இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் 166 தடுப்பூசி மையங்களிலும், தடுப்பூசி செலுத்தும் பயனாளிகளின் பெயர் கோவின் செயலியில் இடம் பெற்றுள்ளதா? என சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பயனாளிகளின் அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து ஊசி செலுத்தப்பட்ட பயனாளிகள் காத்திருப்பு அறையில் மணி நேரம் வைக்கப்பட்டனர். அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களது செல்போனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரமும், அடுத்த முறை செலுத்துவதற்கான தேதி கொண்ட குறுஞ்செய்தியும் வந்தடைந்தது. மணி நேரம் கண்காணிப்பை தொடர்ந்து பயனாளிகள் அனுப்பப்பட்டனர்.
மேலும், மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த பயத்தை போக்கும் விதமாக முக்கிய அரசு டாக்டர்களில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மனோஜ் வி.முர்கேகர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி உள்ளிட்ட பலர் நேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தனியார் டாக்டர்களில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, மாநில தலைவர் ராமகிருஷ்ணன், சென்னை அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, இ.என்.டி. நிபுணர்கள் டாக்டர் கே.கே.ராமலிங்கம், டாக்டர் மோகன் காமேஷ்வரன், மகப்பேறு நிபுணர் டாக்டர் கமலா செல்வராஜ், முக சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி, கண் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் அமர் அகர்வால், எம்.ஜி.எம். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை நேற்று செலுத்தி கொண்டனர்.