சென்னை,
சென்னையில் விபத்து மரணங்களை தடுத்து நிறுத்திட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. திரைப்பட பாடகர் கானா பாலா பாடிய விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய வீடியோ கேசட்டை கடந்த வாரம், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார். நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் நேற்று 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சாலை ஓரமாக நின்று நடத்தினார்கள்.
சென்னை தியாகராயநகரில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும், துண்டு பிரசுரங்களுடன் ரோஜாப்பூ மற்றும் பரிசு பொருட்களையும் கொடுத்து கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.