தமிழக செய்திகள்

கொசஸ்தலை ஆற்றங்கரை பகுதியில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய ஏரிகளான, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வருகின்றன. அந்தந்த நீர் தேக்கங்களில் இருந்து பெரும் அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த உபரி நீர் செல்லும் இடங்களின் கரையில் இருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் ஆய்வு

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நேற்று மணலி புதுநகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், மணலி புதுநகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஒலிபெருக்கி கொண்டு அறிவிப்பு வெளியிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வடக்கு வட்டார துணை கமிஷனர் மா.சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல கண்காணிப்பு அதிகாரி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொசஸ்தலை ஆறு கரையோரம் உள்ள இருளர் காலனி, ஜெனிபர் நகர், காந்தி நகர் மற்றும் ஆர்.எல்.நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 62 குடும்பங்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாமையும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் நிவாரண முகாமில் வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது