தமிழக செய்திகள்

ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு அமைப்பு: அரசு வெளியிட்ட ஆணை ஐகோர்ட்டில் தாக்கல்

தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கபட்டு, அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

உயர் அதிகாரிகள் தாங்கள் அலுவலகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆர்டர்லி நடைமுறைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆர்டர்லி முறையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கலாம் என ஐகோர்ட்டு யோசனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், அரசாணையை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். மேலும் அரசாணையை செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT