கடலூர்,
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடப்பு குறுவை பருவத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஒரு தொடர் நடவடிக்கை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதை விட்டு விட்டனர். அதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய 3 முறை டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த புள்ளி கோரினோம். இதை இறுதி செய்வதற்குள் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது சம்பா பருவ சாகுபடியும் தொடங்கி உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்கு காப்பீடு தேவையில்லை. காப்பீடு செய்யாவிட்டாலும், இயற்கை பேரிடர், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால், அதற்கும் இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும். இதுவரை குறுவை சாகுபடிக்கு இழப்பீடு யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.