சென்னை
மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணை யத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மற்றும் அவரின் உதவியாளர்கள், உறவினர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. 75 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பது பற்றிய மருத்துவ சிகிச்சை விவரங்கள் 2 சூட்கேசில் கொண்டு வந்து சமர்பித்தனர்.
மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர். மேலும் சசிகலாவுக்கு எதிராக சிலர் தகவல்களை கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் விவரங்களை தர ஆணையத்தில் அவரது வக்கீல் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் விவரங்களை தர ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
புகார்தாரர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தவும் ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சிவக்குமார், பூங்குன்றம், பாலாஜி ஆகிய 3 பேரின் விவரத்தை மட்டும் தர மறுக்கப்பட்டுள்ளது. 3 பேரின் தகவல்கள் முழுமையாக பெறப்படவில்லை என்று ஆணையம் விளக்கமளித்துள்ளது.
#Jayalalithaa | #InquiryCommission #sasikala