திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதிலும் 40 சதவீத கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும். மீதி தொகையை பள்ளிகள் திறந்த பிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அரசு உத்தரவை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் 100 சதவீதக்கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் வற்புறுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன. அரசு உத்தரவை மீறி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.