சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், 26-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 29-ந் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணிவரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26-ந் தேதி காலை 6 மணியில் இருந்து 28-ந் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டாலும், சில அத்தியாவசிய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் அனுமதிக்கப்படும்.
மேலும் பத்திரிகைகள் (அச்சிடுதல், செய்தி சேகரித்தல், வினியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகள்), டெலிவிஷன் செய்தி தொடர்பான பணிகள் ஆகியவையும் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.