தொழில் நிறுவனங்களில் ஆய்வு
மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குனர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோருக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அளித்துள்ளது. அந்த தளர்வுகளை தவறாகப் பயன்படுத்தினால் மீண்டும் கொரோனா தொற்று பரவ அது வழிவகுக்கும். அதைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. அதன்படி, கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்தல் அவசியம். தொழில் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டம்
பணியாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே அவர்களை நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியரை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதையும், மருத்துவக் காப்பீடு கட்டாயமாக இருப்பதையும் உறுதி செய்தல் அவசியம். தொழில் நிறுவன வளாகங்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டப்பட்டுள்ளது.