தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டத்தில் 35 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை

கள்ளக்குறிச்சியில் பள்ளி சூறையாடப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டத்தில் 35 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை

தனியார் பள்ளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது. அதே நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரித்தது.

35 பள்ளிகள் இயங்கவில்லை

தேனி மாவட்டத்தில் 61 மெட்ரிக் பள்ளிகள், 19 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 71 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 151 தனியார் பள்ளிகள் உள்ளன. அதில் 24 மெட்ரிக் பள்ளிகள், 8 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 3 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் என 35 பள்ளிகள் நேற்று இயங்கவில்லை. அந்த பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. மற்ற 116 பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.

மூடப்பட்ட பள்ளிகளில் நேற்று காலையில் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக பள்ளிக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. குறுஞ்செய்தியை பார்க்காத சில பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்தனர். நுழைவு வாயிலில் இருந்த காவலாளிகள் பெற்றோரிடம் பள்ளி விடுமுறை என்பதை தெரிவித்து திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மாவட்டத்தில் கல்வித்துறை எச்சரிக்கையை ஏற்று 76.82 சதவீதம் பள்ளிகள் செயல்பட்டன. நேற்று இயங்காத பள்ளிகள் மீது அரசு வழிகாட்டுதல்படி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.