சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஸ் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இரவு நேரத்தில் வெளியிட்ட தமிழக அரசு அடுத்த 4 மணி நேரத்திற்குள் நடைமுறைப்படுத்தியது நேர்மையான அணுகுமுறை அல்ல. மக்கள் கொந்தளிப்பதற்குள் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடிப்பதில் இருந்தே அது தவறானது என்பதை புரிந்து கொள்ள முடியும். பல இடங்களில் சாதாரண விரைவு பஸ் கட்டணம் ஆம்னி பஸ் கட்டணங்களையும், ரெயில்களில் உயர்வகுப்பு கட்டணங்களையும் விட அதிகமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளால் ஏற்கனவே சுமத்தப்பட்ட சுமைகளை தாங்க முடியாமல் மக்கள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் பஸ் கட்டண உயர்வு என்ற புதிய சுமையையும் தாங்க முடியாது. எனவே, பஸ் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஸ் கட்டண உயர்வு நிதி பற்றாக்குறையை குறைக்கும் என்றால் நிதி சுமையில் தள்ளாடும் இந்த அரசு ஏன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. அது நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தாதா?. வாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா?. ஆகவே பஸ் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட வேண்டும். நஷ்டங்களை ஈடு செய்ய மாற்று வழிகளை கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி இன்றி, மக்கள் விரோத நடவடிக்கை தொடருமானால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கக்கூடிய இந்த கட்டண உயர்வை எதிர்த்து 22-ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட, தாலுகா பகுதிகளில் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் நடத்திட கட்சியினரை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு சாதாரண மக்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தி, தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் தற்போது அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
ஆர்.சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டீசல் விலையை மத்திய அரசு கணிசமாக அதிகரித்துக்கொண்டே போவது, அரசு போக்குவரத்து நிறுவனங்களுக்கு வரம்பற்ற செலவுகளை அதிகரித்து கொண்டே போகும். எனவே, மத்திய அரசு, மாநில அரசு போக்கு வரத்து நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் டீசல் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். மேலும், சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் கட்டணங்களை தமிழக அரசு, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.