வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் என்.எல்.சி. ஆபிசர் நகரில் வசித்து வந்தவர் ஊரன் அடிகளார். இவருக்கு வயது 89.
தனது 22-வது வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிய இவர், திருவரங்கம், வேலூர், திருச்சி ஆகிய நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராக 1955-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன்பிறகு தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறி பற்றி ஆராய்ச்சி செய்ய தொடங்கியதோடு துறவு வாழ்க்கை மேற்கொண்டார். திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் 22-5-1933 அன்று பிறந்த இவருக்கு, 23.5.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது.
1970-ம் ஆண்டு முதல் வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தனது பணியை தொடங்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தொண்டாற்றினார்.
ஊரன் அடிகளார் சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அறநிறுவனக் காவலர் முதலிய பன்முக சிறப்பு படைத்தவராக திகழ்ந்தார்.
மேலும் தமிழக துறவியர் பேரவையின் துணை தலைவராகவும் இருந்து வந்தார். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் என்ற விருதை தமிழக அரசு ஊரன் அடிகளாருக்கு வழங்கியுள்ளது.
சைவம், சித்தாந்தம், சன்மார்க்கம் இவற்றின் கலைக்களஞ்சியமாக வாழ்ந்து வந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து வடலூரில் அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் முறைப்படி பூஜை நடத்தப்பட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஊரன் அடிகளார் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள். அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம், தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரும் ஊரன் அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.