கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, செந்தில்முருகன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி கூட் ரோடு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ கொண்ட 440 மூட்டைகளில் 22 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பத்தூரில் இருந்து கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அக்ரஹாரத்தை சேர்ந்த வசந்த், சிவா ஆகியோரது அரிசி ஆலையில் இருந்து ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ரபீக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.