நினைவு தினம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் உள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவலையொட்டி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மாநில தலைவர் உள்பட 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு எல்.ஐ.சி. மருத்துவ காப்பீட்டினை வழங்கினார்.
எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கெடுப்பு
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
உலக தலைவர்களிடையே சிறந்த மனிதராக ராஜீவ்காந்தி விளங்கினார். மக்களுக்காக நாட்டுக்காக அவர் தனது உயிரையே இழக்க நேர்ந்தது. ராஜீவ்காந்தியின் நோக்கங்கள், லட்சியங்களை, செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி முன்னோக்கி எடுத்து செல்லும், தடைகளை தகர்த்து எறிந்து வெற்றியின் சிகரத்தை நாங்கள் அடைவோம். தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அதற்கு எங்களுடைய வாழ்த்துகள்.தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுப்பில் தாமதம் எதுவும் இல்லை, நடைமுறை சென்று கொண்டிருக்கிறது, ஓவ்வொரு
கட்சிக்கும் ஒவ்வொரு நடைமுறை உண்டு, நாங்கள் ஜனநாயக ரீதியில் எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளோம். கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி
முன்னதாக நினைவிடத்தில் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாநில எஸ்.சி.எஸ்.டி. துணைத்தலைவர் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை தலைவர் பிரகாசம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.