சென்னை,
சென்னை அண்ணாசதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் உழைப்பாளர் சிலை அருகே காமராஜர் சாலையில் செல்லும் வாகனங்களை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சுழல் விளக்கு பொருத்திய சொகுசு கார் ஒன்று சென்றது. அந்த காரில் அரசு சின்னத்துடன், தமிழக விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா செயலாளர் என்ற ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய பலகையும் மாட்டப்பட்டிருந்தது.
அந்த காரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் காரில் பொருத்தப்பட்டிருந்த பலகையில் எழுதப்பட்டிருந்த தகவல் அனைத்தும் போலியானவை என்பதும், அரசு சின்னம் மற்றும் சுழல் விளக்கை சட்ட விரோதமாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த காரில் சென்ற பிரசாத்பாபு (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவான்மியூரில் வசிக்கும் அவர், காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.