பல்கலைக்கழகத்தை முடக்க சதி
விழுப்புரத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஏழை மாணவர்களின் நலனை கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து கடந்த பிப்ரவரி 25-ந் தேதி விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு அதற்கான துணை வேந்தரும் நியமிக்கப்பட்டு தற்காலிகமான இடத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது. 2021 சட்டத்தின்படி, எந்தெந்த பல்கலைக்கழகங்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகள் உள்ளதோ அந்த வரையறைக்குள் தான் அந்த
பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று அந்த சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை சார்ந்தது. கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, பாடத்திட்டங்களை வகுப்பது, தேர்வு நடத்துவது இப்படி எதுவானாலும் இந்த பல்கலைக்கழகத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது.
இந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போது இந்த பல்கலைக்கழகத்தை முடக்குவதற்கான சதி நடந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த உயர்கல்வி படிக்க விருப்பப்படுகிற மாணவர்கள் இனி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்தான் விண்ணப்ப மனுவை கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தனது அதிகாரத்தை மீறி தன்னுடைய அதிகார எல்லை இல்லாத பகுதியில் வரையறை எல்லைக்கு அப்பால் விளம்பரம் செய்துள்ளதன் நோக்கம் என்ன? அதற்கான காரணம் என்ன?
அரசின் கவனத்திற்கு
பல்கலைக்கழகத்தை யார் கொண்டு வந்தால் என்ன? ஏழை மாணவ- மாணவிகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம்தான் முக்கியம். மாணவர்களின் எதிர்காலத்திற்காக பல்கலைக்கழகத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர முடக்க நினைப்பதும், மூட நினைப்பதும் சரியல்ல. உயர்கல்வித்துறையின் செயலாளராக இருக்கும் கார்த்திகேயன் தான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர், இந்த அரசிடமும், முதல்-அமைச்சர், துறை அமைச்சரிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஜெயலலிதா பெயரில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தை முடக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். இது இங்குள்ள உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியுமோ, தெரியாதோ என்பது எனக்கு தெரியவில்லை.
முடக்கவேண்டாம்
மாணவர்களின் எதிர்கால நலனை கருதி இந்த பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும். இதில் எந்தவித அரசியலும் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தை முடக்கி விடாதீர்கள், மாணவர்களின் கல்வியை பாழாக்கி விடாதீர்கள். இதை ஒரு நல்ல நோக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் மேல்நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.