தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் பிரபாகரன் (வயது 30) புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

கடந்த 3 மாதங்களாக மூலக்குளம் தென்றல் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டில் அவர் வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டிட வேலை முடிந்த பிறகு அங்குள்ள நீர் மோட்டார் ஸ்விட்சை கையால் பிடுங்க முயன்றார். எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரனை அங்கு இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.