சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களும் சேர வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஆண்டு அவர்களுக்கென்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் கடந்த ஆண்டில் 436 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகளும், 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகளும், 1 சுயநிதி பி.டி.எஸ். கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் சற்று அதிகரித்திருக்கின்றன.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 437 எம்.பி.பி.எஸ். இடங்களும், 107 பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 544 இடங்களை இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் அலங்கரிக்க இருக்கின்றனர்.
10 இடங்களை பிடித்த மாணவர்கள்
இந்த இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தவர்களில் ஆயிரத்து 806 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் 1 முதல் 719 வரையிலான தரவரிசையில் இருந்த மாணவ-மாணவிகள் நேற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் கலந்தாய்வு தொடங்கியது.
தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் முதலில் அழைக்கப்பட்டனர். அதன்படி, முறையே சிவா (அறந்தாங்கி), பிரகாஷ்ராஜ் (திருவண்ணாமலை), சி.சந்தானம் (தர்மபுரி), வெங்கடேஸ்வரி (சேலம்), எஸ்.குமார் (தர்மபுரி), கவிபிரியா (செய்யாறு), தமிழ்பிரியா (செங்கம்), புவனேஸ்வரி (நாகை), ராகுல் (கடலூர்), கலையரசன் (சேலம்) ஆகியோர் இடங்களை தேர்வு செய்தனர்.
இதில் வெங்கடேஸ்வரியை தவிர, மற்ற அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்களை தேர்வு செய்திருந்தனர். வெங்கடேஸ்வரி மட்டும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தேர்வு செய்தார். தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்து மருத்துவ படிப்பை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இடஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
வரப்பிரசாதம், அதிர்ஷ்டம்
தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்து, மருத்துவ படிப்பை தேர்வு செய்தவர்களின் பின்புலம், வசதி வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான். பிரகாஷ்ராஜ், தமிழ்பிரியா, சி.சந்தானம், புவனேஸ்வரி ஆகியோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வெங்கடேஸ்வரி, கலையரசனின் பெற்றோர் தறித்தொழில் செய்கின்றனர். எஸ்.குமார், ராகுலின் பெற்றோர் கூலித்தொழிலாளிகளாகவும், கவிபிரியாவின் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவும் இருக்கின்றனர்.
முதல் இடத்தை பிடித்திருந்த சிவாவின் தந்தை ஆட்டு தோல் வியாபாரம் செய்கிறார். அவர் தன்னுடையமகனுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக காணப்பட்டார். மிகவும் கஷ்டப்பட்டு நீட் தேர்வில் வெற்றிபெற்று, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் இடம் பெற்றதை நினைக்கும்போது ஆனந்த கண்ணீர் வருகிறது என்று அவர் நெகிழ்வாக கூறினார். இதேபோல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெரும்பாலானோரின் பெற்றோர் கூலித் தொழிலாளிகளாகவும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு ஓடி ஓடி உழைக்கும் அடித்தட்டு வர்க்கமாகவும்தான் இருந்தனர்.
உற்சாகமாக தேர்வு செய்தனர்
மருத்துவ படிப்புக்கான இடத்தை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும், அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம் என்றும், தங்களின் மருத்துவ கனவை நனவாக்க வந்த அதிர்ஷ்டம் என்றும் கூறினர்.
கடந்த ஆண்டில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்த நேரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு கட்டணங்களை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு முதலில் வெளியிடப்படவில்லை. இதனால் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்ய அரசு பள்ளி மாணவர்கள் தயக்கம் காட்டினர். பலர், கிடைத்த இடங்களைகூட நிதி நெருக்கடியை நினைத்து உதறினர். அதன்பிறகு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடத்தை தேர்வு செய்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற தகவல் வெளியானது. இதனால், பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை கைவிட்ட பலர் வருத்தம் அடைந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு அதுபற்றிய அறிவு, இடங்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்த தெளிவு இருந்ததால் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக இடங்களை தேர்வு செய்தனர். இந்த மாணவர்கள் அனைவரும் எந்த ஒரு செலவும் இல்லாமல் டாக்டர்கள் ஆகப்போகிறார்கள் என்பது அவர்களின் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.