சென்னை,
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிடப்படுவதால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரை நிறுத்திவைத்து மத்திய நிதி அமைச்சகம் கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டது.
அகவிலைப்படி உயர்வு வழங்கும் விஷயத்தில் மாநில அரசுகள் மத்திய அரசை பின்பற்றி செயல்படும் என்று அப்போது மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசை போலவே பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்து உள்ள தமிழக அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, விடுப்புகளை சரண் செய்து அதை பணமாக பெறுவது போன்றவற்றை நிறுத்தி வைத்து நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டி.ஏ. என்ற அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் உயர்த்தி அறிவிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று தொடர்பாக மத்திய அரசு 23-ந்தேதி அலுவலக கடிதம் ஒன்றை வெளியிட்டு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான கூடுதல் தவணைகள் வழங்கப்படாது என்று உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், வருகிற ஜூலை 1-ந்தேதி மற்றும் அடுத்த ஆண்டு 2021 ஜனவரி 1-ந்தேதி ஆகியவற்றை முன்தேதியாக கொண்டு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ அதையொட்டி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவையே பின்பற்ற தமிழக அரசும் தீர்மானித்து உள்ளது.
அதன்படி அவர்கள் அனைவருக்கும் அடுத்த 2021-ம் ஆண்டு ஜூலை வரையில் அகவிலைப்படி உயர்வுக்கான தவணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அவர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய கூடுதல் தவணை அகவிலைப்படி வழங்கப்படாது.
இந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஆகிய தேதிகளில் இருந்து கணக்கிடப்படும் அகவிலைப்படி கூடுதல் தவணை நிலுவையும் வழங்கப்படாது.
அடுத்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வுகள் மொத்தமாக கணக்கில் எடுக்கப்படும். அதே சமயம், நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகைகள் ஏதும் வழங்கப்படாது.
அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் நூலகர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் 15 நாள்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் 30 நாட்களை ஈட்டிய விடுப்பாக சரண் செய்து அதற்கான தொகையை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஈட்டிய விடுப்பை சரண் செய்து தொகை பெறும் திட்டத்தை அரசு ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து இருப்பதாகவும் அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், ஈட்டிய விடுப்பை சரண் செய்து அளித்துள்ள விண்ணப்பங்கள், பட்டியல்களை பரிசீலிக்க தேவையில்லை என்றும் ஒப்புதல் உத்தரவுகள் அளித்திருந்தால் அதை ரத்து செய்வதுடன், வழங்கப்பட்ட தொகையையும் ஊழியர்களின் கணக்கில் இருந்து மீளப்பெற்று விடுப்புக்கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜி.பி.எப்.) வட்டி 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை இந்த வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக நிர்ணயித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.