கடலூர்,
வங்க கடலில் நிவர் புயலை தொடர்ந்து உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், ராமேசுவரம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருவதால், மழையின் தீவிரம் நேற்றும் ஓய்ந்து விடவில்லை. கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது.
இதனால் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி, கடலூர் நகரம் ஆகிய பகுதிகளில் திரும்பும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாமல் 4-வது நாளாக கொட்டிய மழையால் தொடர்ந்து குடியிருப்புகள் மிதந்து வருகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
புரெவி புயல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று 4-வது நாளாக விடிய விடிய பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அதுபோல் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் 4-வது நாளாக பலத்த மழை பெய்தது. சின்னப்பாலம் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதுடன், ஒரு சில வீடுகளிலும் புகுந்துள்ளது. சில நாட்களாக நீடித்த கடல்சீற்றம் சற்று தணிந்துள்ளது.
4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் மின்சாரம் தடைப்பட்டு ராமேசுவரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் பழுது சரிபார்க்கப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டது. புரெவி புயலால் கடல் சீற்றம் அதிகரித்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பாம்பன் குந்துகால் அருகே உள்ள குருசடை தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் கன மழையினால் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது. இதில் முன்பட்ட சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான 123 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இளம் பயிரான தாளடியும், தாழ்வான பகுதியில் உள்ள சம்பாவும் நீரில் மூழ்கியது. மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.