சர்ச்சை கருத்து
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழில், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நேற்று அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்.
அதாவது நடிகர் பிரித்விராஜ், முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான ஹேஷ்டேக்கை இணைத்து, "உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதை செய்ய வேண்டிய நேரம் இது" என்று கருத்தை பதிவிட்டார்.
விவசாயிகள் கொந்தளிப்பு
இதேபோல் மலையாள முன்னணி நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் பெயரிலும் இந்த அணைக்கு எதிராக கருத்துகள் பகிரப்பட்டன. முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய முல்லைப்பெரியாறு அணை கட்ட வேண்டும் என்று கருத்துகள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் நேற்று இரவில் அதிகம் பகிரப்பட்டது.
இந்திய அளவில் இந்த கருத்துகள் வைரலானது. அதில் பலர் அணை குறித்து தவறான தகவல்களை வதந்தியாக பரப்பினர். முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த நடிகரும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் கருத்துகளை தெரிவித்து வருவது தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை கொந்தளிக்க செய்துள்ளது.
உருவப்படம் எரிப்பு
இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நிர்வாகிகள் பலர், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ், கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல் ஜோய் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது பிரித்விராஜ், ரசூல்ஜோய் ஆகியோரின் உருவப்படத்தை எரித்து அவர்களுக்கு எதிராகவும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இருமாநில நல்லுறவு
பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்த மனுவில், "முல்லைப்பெரியாறு அணை குறித்து வதந்தி பரப்பி, இருமாநில நல்லுறவுக்கு பங்கம் விளைவிக்கும் நடிகர் பிரித்விராஜ், ரசூல் ஜோய் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக போலீஸ் துறையின் கீழ் அணை கண்காணிக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், கேரளாவை சேர்ந்த திரைத்துறையினர் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருமாநில மக்களின் உறவுகளை கெடுக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்கின்றனர்.
எனவே இருமாநில மக்களின் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்து வரும் கேரளாவை சேர்ந்த டாக்டர் ஜோசப், வக்கீல் ரசூல் ஜோய், நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.