சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் நீர்வழி போக்குவரத்து, கடல் மற்றும் துறைமுகங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இடையே கையெழுத்தாகியது.
ரூ.70 கோடியே 53 லட்சம் செலவில் அமைய உள்ள இந்த தேசிய தொழில்நுட்பமையத்தில் கள ஆராய்ச்சி வசதி, வண்டல்படிவம் மற்றும் அரிப்பு மேலாண்மை சோதனை, கப்பல் மாதிரிகளும் இடம்பெறும். இந்த மையத்தின் மூலம் துறைமுகம் மற்றும் கடல்சார் துறைகளை மேம்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. மேக் இன் இந்தியா மற்றும் சாகர் மாலா திட்டத்தின் ஓர் அங்கமாக தேசிய தொழில்நுட்ப மையம் அமைய உள்ளது.
இந்த விழாவில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழா தொடங்கும்போது, சமஸ்கிருத மொழியில் மகா கணபதி இறை வணக்கம் பாடல் பாடப்பட்டது. பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் மரபு. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பை நீக்குவது, தமிழக பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பது என்று பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த சர்ச்சைக்கு விளக்கம் தெரிவித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்தை போன்று ஐ.ஐ.டி.யில் இசைத்துறை கிடையாது. பாடல்களுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் கிடையாது. பாடல்கள் படித்தவர்கள் பகுதி நேர பாடகர்கள். தேசிய கீதம் உள்பட எந்த பாடல்களும் பதிவு செய்யப்பட்ட பாடல்களை நாங்கள் ஒலிபரப்பவில்லை. எனவே சமஸ்கிருத பாடல் தொடர்பான சர்ச்சை தேவையற்றது.
மாணவர்கள் தாங்களாக முன்வந்து சமஸ்கிருத மொழியில் பாடினார்கள். வருங்காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து உள்பட அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்புவதை காட்டிலும் மாணவர்களின் மூலம் வாய்மொழியாக பாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.