தமிழக செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்; தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி வருகை தந்த ராஜீவ்காந்தி, மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரும் பலியாகினர்.

7 பேருக்கு சிறை

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இவ்வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனினும் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

அமைச்சரவை தீர்மானம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பியுள்ளதையும், அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக கவர்னர், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருப்பதையும்

சுட்டிக்காட்டி19-ந்தேதி (நேற்று முன்தினம்) ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

டி.ஆர்.பாலு வழங்கினார்

மேற்கண்ட 7 பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து,7 பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தைஉடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஜனாதிபதி அலுவலகத்தில் நேரில் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 பக்க கடிதம்

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 2 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் மிகுந்த வேதனையில் வாடுகின்றனர். 7 கைதிகளில் ஒருவரான நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்திய அரசியல் சாசனத்தில் 161-வது பிரிவின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டது. அதுபோல சுப்ரீம்கோர்ட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

மக்கள் விருப்பம்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை என்னவென்றால் அந்த 7 பேருடைய தண்டனை காலத்தை குறைத்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். தமிழக மக்களின் விருப்பமும் இதுவாக தான் உள்ளது.இந்தநிலையில் கடந்த 9.9.2018 அன்று அந்த 7 பேருடைய தண்டனை காலத்தின் எஞ்சிய காலத்தை ரத்து செய்து அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் வழங்கியது. ஆனால் தண்டனை குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் காரியம் என்னவென்றால், சி.பி.ஐ.யின் பன்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமையின் விசாரணை நிலுவையில் இருப்பது தான்.

மிகப்பெரிய இழப்பு

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கில் மத்திய அரசும், சி.பி.ஐ.யும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன. அதில், விசாரணைக்கும், தண்டனை குறைப்புக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் இந்த 7 பேருடைய தண்டனை குறைப்புக்கான கோரிக்கை பற்றி முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி தான் அதிகாரம் உள்ளவர் என்று தமிழக கவர்னர் முடிவெடுத்தார். எனவே தமிழக அரசால் கொடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தை உங்கள் பார்வைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த 7 பேரும் ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறையில் கடும்

வேதனையை அனுபவித்து, மிகப்பெரிய இழப்பை சந்தித்துவிட்டனர். தண்டனை குறைப்புக்கு தொடர்பான கோரிக்கைகளில் முடிவெடுப்பதற்கு ஏற்கனவே தேவையில்லாத கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

விடுதலை

தற்போது கொரோனா தொற்று பரவும் காலம் என்பதால் சிறைகளில் நிலவும் நெருக்கடியை குறைப்பது அவசியம் என்பதை நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன. எனவே 9.9.2018 அன்று தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று அந்த 7 பேரின் ஆயுள் தண்டனை காலத்தை குறைத்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...