கன்னியாகுமரி,
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த ஷிபின் என்ற 26 வயது இளைஞர், தனது டுவிட்டர் பக்கத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோவை குண்டு வெடிப்பு, ராஜீவ் கொலை வழக்கு, தற்போது நடைபெற்றுள்ள ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்கள் திமுக ஆட்சி தான் நடைபெற்றுள்ளதாகவும், தீவிரவாத செயல்களுக்கு இந்த ஆட்சி துணை போவதாகவும் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஷிபின் தற்போது சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஷிபின், நாகர்கோவில் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது நாகர்கோவில் சிறையில் ஷிபின் அடைக்கப்பட்டுள்ளார்.