தஞ்சாவூர்;
பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆராய்ச்சி மாணவர்
தஞ்சையை அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவர் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு(பி.எச்.டி.) படித்து வருகிறார். இவர், பிரதமர் நரேந்திரமோடி குறித்து அவதூறு இ-மெயில்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தது? என்று டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த தகவல்கள் தஞ்சை மாவட்டம் பூண்டியில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சை வந்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
பின்னர் பூண்டியில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சிறப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசார் யாரையும் அருகில் நெருங்கவிடவில்லை என்றும் கூறப்படுகிறது.