தாம்பரம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தாம்பரம் சுற்றுவட்டாரங்களில் தங்கி கட்டிட வேலை, பெயிண்டிங் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 23ந்தேதி மேற்கு வங்காளத்தில் இருந்து இளம் தம்பதிகள் தாம்பரம் அருகே தங்கி இருந்த தங்கள் நண்பர்கள் மூலம் சென்னை வந்தனர். சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, பெயிண்டிங் வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று இளம் தம்பதிகள் புது வீட்டில் குடியேறினர்.
ஆனால் அந்த வீட்டில் குடியேறிய மறுநாளே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு புறநகர் பகுதியில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர்.
சென்னை வந்து குடியேறிய மறுநாளே ஊரடங்கால் வேலை கிடைக்காமல் இளம் தம்பதி அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து பிழைத்து வந்தனர். இதற்கிடையில் அவர்களுடைய நண்பர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனிமையாக இருந்த கணவன்மனைவி இருவரும் வேலைவாய்ப்பு இல்லாமல் கடுமையாக கஷ்டப்பட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் காலை வெளியில் நடமாடிக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் அதன் பிறகு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வெளியில் வரவில்லை. நேற்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் எட்டிபார்த்தனர். அதில் கணவன்மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தூக்கில் தொங்கிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட இருவரது பெயர் விவரங்கள் தெரியாததால் அந்த பகுதியில் இருக்கும் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் சேலையூர் போலீசார் விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த அவர்களது பெயர் ஷிபுக்(வயது 33), முத்தாஸ் (24) என்பது தெரிந்தது.
இவர்களில் ஷிபுக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான முத்தாசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டு பிழைப்புக்காக இங்கு வந்து தங்கியது அவர்களது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.