சென்னை,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி கொரோனா பாதிப்பு 1,385 ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று, நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் 1400-க்கும் கீழ் குறைந்தது. அந்தவகையில் நேற்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 797 ஆண்கள், 593 பெண்கள் என மொத்தம் 1,390 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேரும், கோவையில் 145 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 4 பேரும், தென்காசியில் இருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 87 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 235 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
27 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்து 60 ஆயிரத்து 892 ஆண்களும், 11 லட்சத்து 13 ஆயிரத்து 303 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 26 லட்சத்து 74 ஆயிரத்து 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 5 பேரும் என 27 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 7 பேரும், சென்னையில் 3 பேரும், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், திருவாரூர், திருப்பூரில் தலா இருவரும், அரியலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, ஈரோடு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் என 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 734 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
1,487 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,487 பேர் டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 513 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.