சேலம்,
சேலம் இரும்பாலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நோய் கட்டுபாட்டு நடவடிக்கை, அடிப்படை கட்டமைப்பு என இரண்டு பிரிவாக நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் கவன குறைவாக இருக்க கூடாது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக உரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்.
அடுத்த அலையை எதிர்கொள்ள 13 நபர்கள் கொண்ட தனிக்குழுவை அமைத்துள்ளார் முதலமைச்சர். கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்பு நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். மே மாதம் முதல், இரண்டாவது வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது போதுமான கையிருப்பில் உள்ளது. அமுமட்டுமின்றி மேற்கொண்டு ரிசர்வும் செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் கூடுதலாக வாங்கும் பணத்தை மருத்துவமனையிடம் இருந்து பொதுமக்களுக்கே திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிக்கு முக்கியத்துவம் அளிப்பட்டு வருகின்றது. இது வரையில் 95.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஓரிரு நாளில் மேலும், கூடுதலாக தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.