சென்னை,
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய்கிருமியால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கொரோனா குறித்த விழிப்புணவு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கை எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் உள்ளே சென்று அங்கு இருந்த பயணிகளிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கொடுத்தார்.
முக கவசம் அணியுமாறும், கையை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவ வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எழும்பூர் ரெயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் எந்திரத்தை பார்வையிட்டு அடிக்கடி சுத்தம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
சுகாதாரத்துறை சார்பில் ரெயில் நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்தனர். அவர்களிடம் கொரோனாவை தடுப்பதற்கு எந்த மாதிரியான விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்பது குறித்து அமைச்சர் கேட்டார்.
அமைச்சருடன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வின் போதே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஆய்வு முடிந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் வழங்கிய அறிவுரையின்படி அரசின் எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து பரிசோதனை பணியில் தீவிரம் காட்டி உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வருவோரும், வெளிமாநிலங் களில் இருந்து வருவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 பேருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து இருக்கிறோம். வீட்டு கண்காணிப்பில் 2,984 பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமைச்சர் வி.விஜயபாஸ்கர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதே, அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பதில்:- முதலில் மஸ்கட் நாட்டில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த நபருக்கு சிகிச்சை அளித்து அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். தற்போது 2-வதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் டெல்லியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்.
தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடைய ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. சற்று நேரத்துக்கு முன்பு பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
கொரோனா பாதித்த காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு தொடர்புடைய குடும்பத்தினர் உள்பட 27 பேரை எப்படி கண்காணித்தோமோ?, அதே போன்று இவர் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து கண்காணிக்கும் பணி உடனடியாக தொடங்கி உள்ளது. அவர் சென்ற இடங்கள், பழகிய நபர்களை கண்டறிந்து விடுவோம். டெல்லியில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. எனவேதான் தேவையற்ற பயணங்களை தவிருங்கள், பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று (நேற்று) காலையில் 125 பேர் காய்ச்சல் என்று பரிசோதனைக்கு வந்தார்கள். இதில் 25 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வர என்ன காரணம்?
பதில்:- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அவர் (டிஸ்சார்ஜ்) வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதில் வதந்தி வேண்டாம். தற்போது அவர் எங்கு இருக்கிறார்? என்று ஆராய வேண்டாம். சிறிது நாட்கள் வீட்டு கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டும்.
கேள்வி:- முக கவசங்களுக்கு விலை நிர்ணயம் உள்ளதா?
பதில்:- உலக சுகாதார அமைப்பினால் முக்கியமான மருத்துவ பொருட்கள் என்று குறிப்பிடப்பட்ட பொருட் களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.1 கூட உயர்த்தி விற்பனை செய்யக்கூடாது என்பது தான் அரசின் உத்தரவு. அதை தாண்டி அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தாலோ, அதுதொடர்பான தகவல்களை அளித்தாலோ நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 25 லட்சம் முக கவசங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அரசை பொறுத்தவரையில் முக கவசங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை மூட வேண்டும் என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அங்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளதா? என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பெரிய கடைகளை அடைக்கும்படி கூறி இருக்கிறோம். ஆனால் சிறிய கடைகளை திறந்து வைக்கும் படி உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மருந்தகங்களை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். கோயம்பேடு காய்கனி அங்காடியை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
கடைகள் மூடப்படும் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோ.பிரகாஷ் கூறினார்.
முன்னதாக சென்னை மாநகர பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.