கொரோனா தடுப்பூசி போடும் பணி
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.தொடர்ந்து, மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
இந்த நிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்காத நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், போதிய அளவிலான கொரோனா தடுப்பூசி மருந்துகளும் இருப்பில் இல்லை. இதன் காரணமாக, மே 1-ந்தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியவில்லை.இந்த நிலையில், நேற்று திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு வழிகாட்டுதல்கள்படி கடந்த 16-1-2021 அன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 23,565 முன்களப் பணியாளர்கள் மற்றும் 16,106 சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.1-3-2021 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையிலான இணைநோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 1-4-2021 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு முயற்சி
இதனையடுத்து, 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மாநில அரசுகளே செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவையொட்டி, மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ், மாநில அரசுகள் வாங்கும் முறையின் அடிப்படையில் 1 கோடி தடுப்பூசிகளையும், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலமாக 3 கோடி தடுப்பூசிகளையும் வாங்கிட அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.மேலும், இந்த வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால், இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், அதிக தொற்று பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் தடுப்பூசி செலுத்திட, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
ஜவுளிப் பூங்கா
இதன்படி, 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருப்பூர் நேதாஜி ஜவுளிப்பூங்காவில் தொடங்கி வைத்தார்.மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இப்பூங்காவில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் தகுதியுள்ளோர் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்படும்.இந்த நிகழ்வின்போது, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம்
முன்னதாக சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன கூடிய 500 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அங்கிருந்து திருப்பூர் செல்லும் வழியில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.அதன்பின்னர் கோவை கொடிசியா வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.