சென்னை,
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோரின் பணியை மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது.
சென்னை மைலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில், காவலராக பணிபுரிந்து வந்த அருண்காந்தி பட்டினப்பாக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
அருண்காந்தியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
தன்னலம் கருதாமல் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.