சென்னை,
சீனாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமுடன் பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
சீனாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி சீனாவிலுள்ள சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. 1,347 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 11 ஆயிரத்து 791 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இவற்றில் சீனா தவிர்த்து தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, மக்காவ், பிரான்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இங்கிலாந்து, ரஷ்யா, இத்தாலி, இந்தியா, பின்லாந்து, சுவீடன், இலங்கை, கம்போடியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் ஸ்பெயின் ஆகிய 26 நாடுகள் வைரஸ் பாதிப்பினை எதிர்கொண்டு உள்ளன. வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிவிக்கப்பட்ட 27 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.