தமிழக செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை: ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா பெயர் சூட்டப்பட்டது- மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம்

மறைந்த கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா என்று பெயர் சூட்டி மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

மறைந்த கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா என்று பெயர் சூட்டி மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

திருமகன் ஈவெரா மரணம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் தந்தைபெரியாரின் குடும்ப வாரிசாக அரசியல் களத்தில் இருந்தவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகனுமான திருமகன் ஈவெரா, எம்.எல்.ஏ.வாகி 1 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் கடந்த 4-ந் தேதி திடீர் என்று மரணம் அடைந்தார். அவருக்கு 46 வயதுதான் ஆகிறது.

எதிர்பாராத மாரடைப்பால் மரணம் அடைந்த அவரது இழப்பு, ஈரோடு மக்களுக்கு மட்டுமின்றி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது.

மாநகராட்சியில் அஞ்சலி

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சியில் அவருக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் வி.செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு மேயர் சு.நாகரத்தினம் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அவரது பேச்சின்போது, எதிர்கால அரசியலின் இளம் தலைவரை நாம் இழந்துள்ளோம். அவரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஈரோட்டு மக்களுக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து திருமகன் ஈவெரா உருவப்படத்துக்கு மேயர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தீர்மானம்

கவுன்சிலர்கள் சார்பில் மண்டல தலைவர்கள் குறிஞ்சி தண்டபாணி, சசிக்குமார், கவுன்சிலர்கள் சபுராமா ஜாபர்சாதிக், வக்கீல் ரமேஷ், செந்தில்குமார், தங்கவேலு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள். குறிஞ்சி தண்டபாணி, வக்கீல் ரமேஷ் ஆகியோர் திருமகன் ஈவெராவுடன் பழகிய மாணவர் பருவ நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார்கள்.

நேற்றைய அவசர கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா என்று பெயர் சூட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலைக்கு பெயர் சூட்டப்பட்டது

அந்த தீர்மானம் வருமாறு:-

ஈரோடு மாநகராட்சியின் மண்டலம்-4 வார்டு எண் 43-ல் அமைந்து உள்ள பிரதான சாலையாக கச்சேரி வீதி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வசித்த வீடு இங்கு உள்ளது. உடல் நலக்குறைவால் காலமான திருமகன் ஈவெரா நினைவாக அவர் வீடு அமைந்து உள்ள கச்சேரி வீதி ரோட்டுக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் சூட்ட ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் கோரிக்கை கடிதம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மாமன்றத்தின் ஒப்புதலை பெற தீர்மானம் வைக்கும்படி சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி அளித்தார். எனவே கச்சேரி வீதி சாலையை திருமகன் ஈவெரா சாலை என பெயர் சூட்ட மாமன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.

இவ்வாறு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கட்சி வேறுபாடுகள் இல்லாமல் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இதன் மூலம் கச்சேரி வீதி இனிமேல் திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...