நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் கேரளாவை சேர்ந்த 2 பேர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் பிணங்கள்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி பெரியகரடு வனப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களின் பாக்கட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஆகியவை இருந்தது. வனப்பகுதியில் கேரளா பதிவு எண் கொண்ட கார் நின்று இருந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலையா?
அப்போது இறந்து கிடந்தவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாத்துக்காடு பகுதியை சேர்ந்த நிவீல்குருஸ் (வயது58), எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்பாய் (47) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார், இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேர் வனப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.