தமிழக செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏன் ஏற்கக்கூடாது? என்பதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தங்க தமிழ்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

இதில், 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செய்தது தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

இந்த தீர்ப்பு தொடர்பாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் கடுமையான விமர்சனம் செய்தார்.

தலைமை நீதிபதி குறித்து அவர் தெரிவித்த கருத்து, கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று கூறி, தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வக்கீல் ஸ்ரீமதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து முடிவு செய்ய தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணுக்கு, ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பி வைத்தது.

இந்த மனுவை படித்து பார்த்த அட்வகேட் ஜெனரல், கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் பதிவான இந்த வழக்கை ஏன் விசாரணைக்கு ஏற்கக்கூடாது? என்பது குறித்து தங்க தமிழ்செல்வன் வருகிற ஜூலை 17-ந்தேதி நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது