சென்னை
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அறிக்கை விவரம் வருமாறு :-
சந்தைகளில் இறைச்சிக் காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அனைத்து பகுதி மக்களையும் கடுமையாக பாதிக்கக் கூடிய நடவடிக்கையாகும்.
மாநில பட்டியலில் இருக்கும் இப்பிரச்னையில் மத்திய அரசு தானடித்த மூப்பாக தலையிட்டு, தன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் அறிவிக்கை வெளி யிட்டிருப்பது மாநில உரிமை களை உதாசீனபடுத்துவதாகும். நாடாளுமன்றம், அமைச்சரவை போன்ற பல தீர்மானிக்கும் அமைப்புகளும் புறக்கணிக்கணிக்கப்பட்டு ஜனநாயக மரபுகளும் மீறப்பட்டி ருக்கின்றன.
விவசாயிகளின் வாழ்க்கையை இது முற்றிலும் புரட்டிப்போடுகிறது. ஏற்கனவே வறட்சியின் பிடியில் வாழ்வை அடமானம் வைத்திருக்கும் விவசாயிகள், இனி பால்சுரப்பு நின்று போன மாடுகளையும், விவசாய பணிகளுக்கு உதவாத வயது முதிர்ந்த மாடுகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற நிலை, பெரும் பொருளாதார இழப்புக்கு அவர்களைத் தள்ளும்.
விவசாயிகளின் தற் கொலை நீள்கதையாக வேண்டும், கிராமப்புற பொருளாதாரம் நொறுங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா?
மாடுகளை வாங்கி விற்பவர்கள், இறைச்சி தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்களை இந்த முடிவு வேலை இழக்க வைக்கும். வாழ்வாதாரத்தைத் தொலைக்க வைக்கும். சென்னையில் மட்டும் 40000 பேர் பாதிக்கப்படுவார்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்கள் கூடுதலாக பாதிப்புகளை சந்திப்பார்கள்.
உணவுக்கான உரிமையை மத்திய அரசின் இந்த முடிவு தகர்த்து எறிகிறது. என்ன உண்ண வேண்டும், உண்ண கூடாது என்று சொல்வதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது ஒற்றை கலாச்சாரத்தைத் திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் இதற்கு அடிபணிய மாட்டோம் என்ற நிலை எடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழக அரசு மவுனத்தைக் கலைத்து எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். ஏற்கனவே தமிழக நலனை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, மேலும் பாதிப்புகளையும், நெருக் கடிகளையும் உருவாக்குவதை அனுமதிக்கக் கூடாது.
மோடி அரசின் 3 ஆண்டுகால ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கக் கூடிய சூழலில், இதன் மீதான விவாதங்களையும், அதிருப்தியையும் திசை திருப்பும் அரசியலும் இம் முடிவுக்குப் பின் இருப்பதை கவனிக்க தவற கூடாது.
இந்திய மக்களுக்குத் துயரம் இல்லாமல் ஒரு நாளும் இருந்து விடக் கூடாது என்ற வெறியுடன் எடுக்கப்பட்ட இந்த மோச மான முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக மெங்கும் சுயேச்சையாகவும், கூட்டாகவும் மக்களைத் திரட்டி கண்டனம் முழங்குவோம். தமிழக மக்கள், இத்தகைய எதேச்சதிகார செயலை எதிர்த்து வீதிகளுக்கு வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறோம்.இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.