சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.
இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணிவிருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று சவால் விட்டு தொடர்ந்து பேசி வருகிறார். சீமான் மீது தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.