சென்னை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் வீசிய புயல்கள் காரணமாக நெல், வாழை, மணிலா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் அழிந்தும், கால்நடைகள் உயிரிழந்தும், பல இடங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டும் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகினர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி நிவாரணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இடுபொருள் நிவாரணம் என்கிற பெயரில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் என்று நிவாரணம் அறிவித்திருப்பது மிகக் குறைவான தொகையாகும். அனைத்து விவசாய சங்கங்களும் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது.
எனவே, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல குடிசை பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவற்றுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை தாமதமின்றி மத்திய அரசும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.